மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத் தேரோட்டம்.!

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின்  தேர் உற்சவம் இன்று (11.08.2026) காலை சிறப்பாக நடைபெற்றது.

​கடந்த (03.08.2026)ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்வாலயத்தின் மஹோற்சவத்தில், இன்று  (11.08.2026)ஆம் திகதி காலை 06.50 மணியளவில் விசேட கிரியை வழிபாடுகள் மற்றும் வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்றன.

விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டு, பஞ்சமுக விநாயகருக்கு விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சுவாமி வீதியுலா எழுந்தருளினார்.

​பின்னர், வெளிவீதியில் பஞ்சமுக விநாயகர் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஆரோகணிக்க, பல்லாயிரக்கணக்கான அடியார்களின் 'அரோகரா' கோஷத்திற்கு மத்தியில் ஆயிரக்கணக்கான ஆண் மற்றும் பெண் பக்தர்கள் வடமிழுத்துத் தேர் உற்சவத்தை கோலாகலமாகச் சிறப்பித்தனர்.

​ஸ்ரீராமபிரானால் வழிபடப்பட்ட பெருமையும், பிதுர்க்கடன் தீர்க்கும் புனிதத் தீர்த்தக் கேணியைக் கொண்ட தலமாகவும் விளங்கும் இவ்வாலயத்தின் ஆடி அமாவாசைத் தீர்த்தோற்சவம் நாளை (12.08.2026) ஆம் திகதி வரலாற்றுச் சிறப்புமிக்க மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் கேணியில் நடைபெறவுள்ளது.
புதியது பழையவை