வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவத் திருவிழா இன்றைய தினம் (11.08.2026) ஆம் திகதி மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இன்றைய நாள் அதிகாலையில் மூலஸ்தான முருகப்பெருமானுக்குச் சிறப்புப் பூஜைகளும், அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் சிறப்பு வழிபாடுகளும் இடம்பெற்றன.
பூஜைகளைத் தொடர்ந்து, முருகப்பெருமான் பஞ்சரதங்களில் ஆரோகணித்து உள்வீதி மற்றும் வெளிவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகை தந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமானை மனமுருகி தரிசித்தனர்.
சோழ இளவரசியின் குதிரை முகம் நீங்கிய அற்புதத் தலம்.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மிகவும் பழமைவாய்ந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க சைவத் திருத்தலமாகும். குதிரை முகத்துடன் பிறந்த சோழ இளவரசி மருதப்புரவீகவல்லி, இத்தலத்து முருகப்பெருமானை வழிபட்டுத் தனது குதிரை முகம் நீங்கப்பெற்ற அற்புத வரலாற்றைக் கொண்டது.
'மா' (குதிரை) தனது முகத்தை விட்டு 'விட்ட' இடம் என்பதால் இத்தலம் 'மாவிட்டபுரம்' எனப் பெயர் பெற்றது.
மகோற்சவத்தின் நிறைவுப் பகுதியாக, ஆடி அமாவாசை தினமான நாளையதினம் (12.08.2026) ஆம்திகதி மாவை கந்தனுக்குத் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் நிறைவேற்றும் முக்கிய புண்ணியத் தலமாக விளங்கும் கீரிமலை தீர்த்தக் கரையில், நாளை லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு பிதிர் கடன்களை நிறைவேற்றி, தீர்த்தமாடி இறைவனை வழிபடுவது தொன்றுதொட்டு வழக்கில் உள்ள ஊர் மரபாகும்.
இதற்கான சகல ஏற்பாடுகளும் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன.