கிழக்கு பல்கலைக்கழக விடுதியில் மாணவி உயிர்மாய்ப்பு - இரு மாணவிகள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்ததால் மட்டக்களப்பில் பரபரப்பு!

​கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் இன்று (19.08.2026) ஆம் திகதி பிற்பகல் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

​நாடகத்துறை கற்கைநெறிக்காகத் தெரிவு செய்யப்பட்டு, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கல்லூரியில் இணைந்து முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்த இவர், கல்லூரி விடுதியில் தங்கியிருந்துள்ளார்.

 இந்நிலையிலேயே, இன்று பிற்பகல் 12.00 மணியளவில் விடுதி அறையில் இவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்துள்ளார்.

​இச்சம்பவத்தைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள் இருவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாகச் செயற்பட்ட ஏனைய மாணவர்கள், உயிர்மாய்ப்பு செய்த மாணவியையும் மயங்கி விழுந்த இருவரையும் மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர்.

​எனினும், குறித்த மாணவி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டதாகவும், மயக்கமடைந்த மாணவிகள் இருவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


​உயிரிழந்த மாணவியின் சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

​அதிகரிக்கும் உயிர்மாய்ப்புகள்:
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டின் ஜனவரி 01 முதல் ஜூலை 31 வரையிலான கடந்த 7 மாதங்களில் 84 பேரும், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 8 பேரும் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்துள்ளனர்.

கடந்த 2025 ஆம் ஆண்டில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 164 உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட பொலிஸ் தலைமைக் காரியாலயப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை