கடந்த இரண்டு வார காலமாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்த, அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்றதாக கூறப்படும் சுகாதார உதவியாளரின் சீருடை தொடர்பான பிரச்சனை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது .
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார் .
கடந்த இரண்டு வார காலமாக பிரச்சினை கொழுந்து விட்டு எரிகிறதே. இது வரை நீங்கள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.எனவே இது தொடர்பாக உங்களது கருத்து என்ன என்று எமது ஊடகவியலாளர் சகா அவரிடம் கேட்ட பொழுது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,..
கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த 06 ஆம் திகதி புதிதாக நியமிக்கப்பட்ட 37 மூவின சுகாதார உதவியாளர்களுள் 09 பேர் இஸ்லாமிய பெண்களாவர்.
அவர்களது சீருடைப் பிரச்சினை தொடர்பாக இன்று சுகாதார அமைச்சு தீர்க்கமான முடிவை அனுப்பியுள்ளது.
அதாவது குறித்த ஒன்பது இஸ்லாமிய பெண் சுகாதார உதவியாளர்களையும் அருகிலுள்ள கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு கிடைத்திருக்கின்றது. அவர்கள் நாளை விடுவிப்பு செய்யப்படவிருக்கின்றார்கள் .
அத்தோடு இந்த பிரச்சினை முடிவுக்கு வருகிறது என்று கூறினார் .
இதேவேளை கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியசாலை குழுவின் தலைவர் பிரபல சமூக செயற்பாட்டாளர் சந்திரசேகரம் ராஜனிடம் கேட்ட பொழுது..
ஆம் அதற்கான இடமாற்றக் கடிதம் இன்று சுகாதார அமைச்சிலிருந்து கிடைக்கப்பெற்றிருக்கின்றது. நாளை அவர்கள் 9 பேரும் விடுவிக்கப்படுகிறார்கள் .
இதற்காக ஒத்துழைத்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவி. கோடீஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் எமது குழுவின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன் என்றார்.