சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "நீதிக்கான நீள் பயணம்" பேரணி மற்றும் சர்வதேச மாநாட்டிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தனது முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர்.
ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் யோகராசா துஷாந்தன்:
"பல ஆண்டுகளாகத் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையையும் நீதியையும் வேண்டித் தாய்மார்கள் வீதியில் நின்று போராடி வருகின்றனர்.
அவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஆதரவை வழங்க வேண்டும்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியடியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகும்.
அதனைத் தொடர்ந்து தந்தை செல்வா கலையரங்கைச் சென்றடைந்து, 'நீதிக்கான நீள் பயணம்' என்ற பெயரில் ஒரு நாள் சர்வதேச மாநாடும் நினைவு நிகழ்வும் நடைபெறவுள்ளது.
எமது உறவுகளின் கோரிக்கைகள் சர்வதேச சமூகத்தைச் சென்றடைய வேண்டும்.
எனவே, தமிழ் மக்கள், அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் 30ஆம் திகதி நடைபெறும் இந்நிகழ்வில் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்" என அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றிய ஊடகப் பேச்சாளர் கனகசூரியர் கவிதரன்.
"வீதியில் இறங்கிப் போராடும் தாய்மார்களுக்கு ഇതുவரை எவ்விதத் தீர்வும் கிடைக்கவில்லை. பலர் தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் வயது முதிர்வினால் உயிரிழந்து வருகின்றனர்.
தமிழ் சமூகத்தின் தேவைக்காகக் கல்வியோடு சேர்த்து போராட்டங்களையும் முன்னெடுக்கும் மாணவர் சமூகத்தைச் சிலர் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது. விமர்சனங்களைத் தவிர்த்து, தமிழர்களாக அனைவரும் ஓரணியில் திரண்டு போராடினால் மட்டுமே எமது மக்களுக்கு உரிய நீதி கிடைக்கும்" எனக் குறிப்பிட்டார்.