மட்டக்களப்பு போரதீவுப்பற்றில் காட்டு யானைகளின் அட்டகாசம் - பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்பு!

​மட்டக்களப்பு மாவட்டம் 
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம், நெல்லிக்காடு பகுதியில் நேற்று (09.08.2026)ஆம் திகதி  இரவு 11.40 மணியளவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று வீடுகளையும் பயிர்களையும் சேதப்படுத்தி அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

​அப்பகுதிக்குள் புகுந்த காட்டு யானை, பொதுமக்களின் 2 வீடுகள், அவற்றின் சுற்றுமதில்கள் ஆகியவற்றை இடித்துச் சேதப்படுத்தியதோடு, நிலத்திலிருந்த பயன் தரும் மரங்கள் மற்றும் பயிர்களையும் முற்றாகத் துவம்சம் செய்துள்ளது.
​இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் தங்கராசா கயசீலன் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

அவர் வெல்லாவெளி வனவிலங்கு அதிகாரிகளின் அனுமதியோடு, ஊர்காவல் படையினரின் உதவியுடன் ஆபத்தான நிலையில் இருந்த பொதுமக்களை எவ்வித உயிர் ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்டெடுத்தார்.

​போரதீவுப்பற்று எல்லைக் கிராமங்களில் வேளாண்மை அறுவடை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாலை மற்றும் இரவு வேளைகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் வெகுவாக அதிகரித்து வருகின்றது.

ஏற்கனவே இப்பகுதியில் காட்டு யானைகளின் தாக்குதலால் பல உயிர்கள் பலியாகியுள்ளதுடன், ஏராளமான வீடுகளும் உடைமைகளும் அழிக்கப்பட்டுள்ளன.

​எனவே, எல்லைக் கிராமங்களில் வாழும் பொதுமக்களின் உயிரையும் சொத்துக்களையும் பாதுகாக்கும் வகையில், சம்பந்தப்பட்ட வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளும் உரிய தரப்பினரும் உடனடியாக நிரந்தரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பிரதேச பொதுமக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதியது பழையவை