கூர்மையான ஆயுதத்தால் பெண் தாக்கிப் படுகாயம் -காத்தான்குடியில் பரபரப்பு!

​மட்டக்களப்பு, காத்தான்குடி - மஞ்சந்தொடுவாய், ஷரீப் வீதியில் 68 வயதான பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்த சம்பவம் இன்று (23.08.2026) மாலை 5:15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

​பாதிக்கப்பட்ட பெண் தனது வீட்டருகே சிறிய கடை ஒன்றினை நடத்தி வருகின்றார். 

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தவேளை, இனந்தெரியாத நபரொருவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

​கடைக்கு பொருட்கள் வாங்க வந்த இரு சிறுவர்கள் அப்பெண் காயமடைந்து கிடப்பதைக் கண்டு, அருகிலிருந்த பெரியவர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக மீட்டெடுக்கப்பட்ட அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றார். .

தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

​தாக்குதலை நடத்திய நபர் தொடர்பில் இதுவரை எவ்விதத் தகவலும் வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடி பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை