கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலங்களில் ஒன்றான மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பலாச்சோலையில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கருணைமலைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பிரம்ம மஹோற்சவப் பெருவிழா, தீர்த்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் பக்திப்பூர்வமாக நிறைவடைந்தது.
கடந்த (03.08.2026)ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமானது.
தொடர்ந்து வந்த நாட்களில் எம்பெருமானுக்கு நாளாந்தம் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சுவாமி உள்வீதி மற்றும் வெளிவீதியுலாக்களும் இடம்பெற்று வந்தன.
விழாவின் முக்கிய அம்சமான தேர்த்திருவிழா நேற்று(11.08.2026)ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் மிக விமரிசையாக நடைபெற்றது.
வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருந்த கணபதிப் பெருமானுக்குச் சிறப்புத் தீபாராதனைகள் காட்டப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் "அரோகரா" கோஷத்திற்கு மத்தியில் சுவாமி சித்திரத் தேரில் எழுந்தருளப்பண்ணப்பட்டார்.
மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேர் வீதியுலா வெகு சிறப்பாக இடம்பெற்றது.
மஹோற்சவத்தின் நிறைவு நிகழ்வான தீர்த்தோற்சவம் இன்று (12.08.2026)ஆம் திகதி புதன்கிழமை காலை திருப்பொற்சுண்ணம் இடித்து விநாயகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து விநாயகப்பெருமான் மூசிக வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து, நவகிரி ஆற்றில் பக்தர்களின் ஆன்மீகப் பெருக்கோடு தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இன்று மாலையில் கொடியிறக்க உற்சவத்துடன் ஆலயத்தின் வருடாந்த பிரம்ம மஹோற்சவப் பெருவிழா இனிதே நிறைவு பெற்றது.
விழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமானின் அருளைப் பெற்றனர்.