சம்மாந்துறையில் திடீர் சுற்றிவளைப்பு - 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல் !

சம்மாந்துறை பொலிஸாரால் இன்று (31) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, போக்குவரத்து சட்டங்களை மீறியமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வேதமுல்லவின் மேற்பார்வையில், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராச்சியின் ஆலோசனைக்கு அமைய, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் நெறிப்படுத்தலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் நேரடி வழிகாட்டலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறியதுடன், பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், 10 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை செலுத்துவோருக்கு எதிராக தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சம்மாந்துறை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
புதியது பழையவை