மன்னார் பகுதியில் டைனமைட் வெடிபொருட்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 200 கிலோகிராமிற்கும் அதிகமான மீன் தொகையை நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் அழித்துள்ளனர்.
இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சோதன நடவடிக்கையின் போது, டைனமைட் மூலம் மீன்பிடித்த சந்தேகநபர் ஒருவர் படகு மற்றும் மீன் தொகையுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட மீன்களை கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளும் பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்து சோதனையிட்டனர்.
இதில், வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதால் அம்மாமிசம் மனித நுகர்வுக்கு முற்றிலும் பொருத்தமற்றது என உறுதி செய்யப்பட்டது.
இலங்கையில் டைனமைட் போன்ற வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறான முறைகள் ஒரே நேரத்தில் அதிகளவிலான மீன்களைக் கொல்வதுடன், குஞ்சு மீன்கள் மற்றும் கடல்சார் வளங்கள், சுற்றுச்சூழல் அமைப்பையும் கடுமையாகப் பாதிக்கின்றன.
இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது, அவற்றை மனித நுகர்வுக்குப் பயன்படுத்தாமல் உடனடியாக அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 200 கிலோவிற்கும் அதிகமான மீன்கள் கடற்படை, கடற்றொழில் திணைக்களம் மற்றும் பொது சுகாதாரத் துறையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் அழிக்கப்பட்டன.