மட்டக்களப்பு, மாநகரசபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலையின் 36ஆவது ஆண்டு நிறைவு நினைவேந்தல் நாளான இன்று (09/09/2026) கொல்லப்பட்ட அப்பாவிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 1990ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ஆம் திகதி, சத்துருக்கொண்டான் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த பச்சைக் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் உட்பட 186 அப்பாவித் தமிழ் மக்கள் இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவற்படையினராலும் மிக மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
தமிழின வரலாற்றில் நீங்காத வடுவாக அமைந்த இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்று 36 ஆண்டுகள் உருண்டோடிவிட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் தகுந்த நீதியோ அல்லது நியாயமோ கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கொடூரப் படுகொலையின் 36ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு, உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தனது ஆழ்ந்த அஞ்சலியையும் நினைவுகளையும் தெரிவித்துள்ளார்.