ஆபத்தில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் பாதுகாப்பாக கொழும்பு அழைத்து வரப்பட்டனர்.!

இலங்கை கடற்படையினர் மற்றும் பல்வேறு முகமைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம், கடலில் ஆபத்தில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள்  (24.09.2026)ஆம் திகதி மாலை பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

செப்டம்பர் 22ஆம் திகதி இலங்கைக்கு தெற்கே பயணித்த ‘KM Garuda Jaya VI’ என்ற இந்தோனேசிய மீன்பிடிப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் ஆஸ்திரேலிய தேடல் மற்றும் மீட்பு மண்டலத்திற்குள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கடலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்த 25 மீனவர்களையும் ‘MV Moonstone’ என்ற வணிகக் கப்பல் மீட்டு, கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) தகவல் வழங்கியது.

தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கொழும்பு MRCC-யின் ஒருங்கிணைப்பில் இலங்கை கடற்படையின் இரண்டு படகுகள் அனுப்பப்பட்டு, மீட்கப்பட்ட மீனவர்கள் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், மீனவர்களுக்கு தேவையான மனிதநேய மற்றும் அடிப்படை உதவிகளை இலங்கை கடற்படையினர் வழங்கினர். பின்னர், மேலதிக நடவடிக்கைகளுக்காக அவர்கள் இலங்கையிலுள்ள இந்தோனேசிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
புதியது பழையவை