யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்- பொலிஸார் தலையீட்டால் பரபரப்பு.!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று(25.09.2026)ஆம் திகதி  முன்னெடுக்கப்பட்ட அமைதியான அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பொலிஸார் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
​யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று (25.09.2026)ஆம்  திகதி காலை மாணவர்களின் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் அமைதியான முறையில் தொடங்கியது. 

இந்நிலையில், அங்கு திடீரென வருகை தந்த பொலிஸார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் தேவையற்ற முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

​ஒலிபெருக்கி பாவனைக்கு தடை:
போராட்டத்தில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியாது எனக் கூறிய பொலிஸார், அவற்றை உடனடியாகக் கழற்றுமாறு உத்தரவிட்டனர். 

மேலும், ஒலிபெருக்கிப் பயன்பாட்டிற்கு பொலிஸ் நிலையத்திற்கு வந்து அனுமதி பெறுமாறும் வலியுறுத்தினர்.

​இதற்குப் பதிலளித்த மாணவர்கள், தாம் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டியதுடன், பொலிஸ் நிலையம் வந்தால் உடனடியாக அனுமதி வழங்குவீர்களா என்றும் கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு உரிய பதிலளிக்காத பொலிஸார், நிலையப் பொறுப்பதிகாரியிடம் வந்து பேசுமாறு கெடுபிடி காட்டியுள்ளனர்.

​
சில நாட்களுக்கு முன்னர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கிகளை பொலிஸார் கழற்றிச் சென்றதாகவும், பலமுறை கோரிக்கை விடுத்தும் அவற்றை இதுவரை திரும்பத் தரவில்லை என்றும் மாணவர்கள் சுட்டிக்காட்டினர். 

அத்துடன் அதற்கான அனுமதியும் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
​இவ்வாறான பின்னணியில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெயர் விவரங்களைப் பதிவுசெய்த பொலிஸார், ஒலிபெருக்கிகளை உடனடியாக அகற்றுமாறு தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளனர். 


பொலிஸாரின் இந்த அடாவடிச் செயற்பாட்டால் பல்கலைக்கழக வளாகத்தில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் முரண்பாடு ஏற்பட்டு, பெருமளவு பதற்றமும் பரபரப்பும் நிலவி வருகிறது.
புதியது பழையவை