மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மண்டூர் பகுதியில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற தரமற்ற மென்பானங்களை விற்பனைக்கு விநியோகித்த நிறுவனத்திற்கு (18.09.2026)ஆம் திகதி களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் ரூ. 3,60,000 தண்டப்பணம் (அபராதம்) விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மண்டூர் பகுதியில் வாகனமொன்றில் விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்ட 'Laklight' நிறுவனத்திற்குச் சொந்தமான 16 வெவ்வேறு வகையான மென்பான மாதிரிகள், மண்டூர் பொறுப்பு பொது சுகாதாரப் பரிசோதகர் கே. இளங்கோவன் தலைமையில், பொது சுகாதாரப் பரிசோதகர்களான சிவசுதன், விக்னேஸ்வரராஜா மற்றும் ஜீவிதன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் கைப்பற்றப்பட்டு அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையின்படி, சோதிக்கப்பட்ட மாதிரிகளில் 04 மென்பானங்கள் மனித நுகர்வுக்கு முற்றிலும் பொருத்தமற்றவை மற்றும் தரமற்றவை என உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, குறித்த மென்பான உற்பத்தியாளர், பிராந்திய விநியோகஸ்தர் மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர் ஆகியோருக்கு எதிராக தலா மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் மண்டூர் பொறுப்பு பொது சுகாதாரப் பரிசோதகர் கே. இளங்கோவனால் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்குகளை விசாரணை செய்த களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, 04 வழக்குகளுக்கும் தலா ரூ. 90,000 வீதம் மொத்தமாக ரூ. 3,60,000 (மூன்று இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய்) அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மண்டூர் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட இந்த விரைவான மற்றும் அதிரடி நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.