மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தியாகி திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

​தியாகி திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (26.09.2026)ஆம் திகதி  மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இரு வெவ்வேறான இடங்களில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன.

​ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக அஞ்சலி..!

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு முன்பாக முதல் நிகழ்வு நடைபெற்றது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

​இதன்போது தியாகி திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, தீபச்சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நினைவுப்பேருரையும் இடம்பெற்றது.

​காந்தி சிலையடியில் இடம்பெற்ற நினைவேந்தல்..!

தொடர்ந்து, மட்டக்களப்பு மாநகரசபை, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தமிழ் தேசிய ஏற்பாட்டுக்குழு இணைந்து மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு அருகில் மற்றொரு நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. 

மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், இ.சிறிநாத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் மாநகர முதல்வர் சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், இலங்கைத் தமிழரசுப் கட்சி உறுப்பினர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கெடுத்தனர்.

​கடந்த 2024 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் இரு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு, தியாகி திலீபனுக்குச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதுடன் நினைவுரைகளையும் ஆற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை