மட்டக்களப்பு பகுதியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் (09.10.2026)ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது.
கடந்த( 24.9.2026)ஆம் திகதி, சிறுமியின் தாயார் மருத்துவமனைக்குச் செல்வதற்காகத் தன் கணவரின் தாயாரை அழைத்து, சிறுமியை அவரது பாதுகாப்பில் விட்டுச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், வீட்டில் கணவரின் தாயார் இல்லாத சமயத்தைப் பயன்படுத்திய சிறுமியின் அப்பப்பா (தாத்தா), அச்சிறுமிக்கு பாலியல் சீண்டல் செய்துள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் வீட்டார் அவருக்குத் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த (25.09.2026)ஆம் திகதி இச்சம்பவம் தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் உடனடியாக காவல்துறையினருக்கு அறிவித்ததையடுத்து, விரைந்து செயற்பட்ட பொலிஸார் சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தாவைக் கைது செய்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்றைய தினம் (26.09.2026) ஆம் திகதி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே, அவரை எதிர்வரும் (09.10.2026)ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.