ஒக்டோபர் மாத எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு வெளியீடு - டீசலுக்கு 70 ரூபாய் மானியம் வழங்கி நிதிச் சுமையைக் குறைக்க அரசாங்கம் திட்டம் ..!

​ஒக்டோபர் மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று (30.09.2026) இரவு வெளியிடப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

​இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

வழக்கமான நடைமுறைக்கு அமைவாக, ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலுமே எரிபொருள் விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.  

​டீசலுக்கு 70 ரூபாய் மானியம்
இம்முறை மேற்கொள்ளப்படவுள்ள விலைத் திருத்தத்தின் கீழ், ஒரு லீட்டர் டீசலுக்கு 70 ரூபாய் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்தார். எனினும், இந்த மானியச் சலுகை பெற்றோலுக்கு வழங்கப்படமாட்டாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.  

​நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நட்டம்
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளதன் காரணமாக, இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கணிசமான நிதி இழப்பைச் சந்தித்து வருகின்றன. இது குறித்து அரசாங்கத்திற்கு அந்நிறுவனங்கள் தங்களின் தகவல்களைச் சமர்ப்பித்துள்ளன.

அதன்படி, ஒரு லீட்டர் டீசல் விற்பனையில் சுமார் 120 ரூபாய் முதல் 247 ரூபாய் வரை நட்டம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​கூட்டுத்தாபனத்தின் நிதிச் சுமை
எரிபொருள் மானியம் வழங்கப்படுவதன் காரணமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெரும் நிதிச் சுமையை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அதேவேளை நடப்பு ஆண்டின் இறுதிக்குள் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படாத வகையில் தேவையான நிதியியல் மேலாண்மை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.
புதியது பழையவை