முறைப்படியான சேவைப் பிரமாணக் குறிப்பு, வாழ்க்கைச் செலவுக்கேற்ற கொடுப்பனவுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மட்டக்களப்பு போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நேற்று(31.08.2026)ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
அரசு மற்றும் மாகாண அரச சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினால் இந்நடவடிக்கை ஒருங்கிணைக்கப்பட்டது.
15 தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்த இப்போராட்டம், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களுக்கு முன்பாகவும் நண்பகல் 12:00 மணி அளவில் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்....
1999ஆம் ஆண்டிலிருந்து சேவையில் இணைக்கப்பட்ட போதிலும் கடந்த 27 வருடங்களாக நிலவும் முறையான சேவைப் பிரமாணக் குறிப்பு இன்மையை உடனடியாக தீர்த்தல்.
கல்வித் தகைமைக்கேற்ப சம்பளக் குறியீடு மற்றும் சம்பள அதிகரிப்பு வழங்குதல், விசேட தரம் உள்ளடங்கிய பதவி உயர்வுகளை வழங்குதல், பதவி உயர்வுக்கான கால எல்லையை 10 வருடங்களிலிருந்து 5 வருடங்களாகக் குறைத்தல்.
வாழ்க்கைச் செலவு உயர்விற்கு ஏற்ப பயணக் கொடுப்பனவை 2,000 முதல் 2,500 ரூபாய் வரை அதிகரித்தல்.
நிலையான பெயர் மற்றும் சேவை அமைப்பை உருவாக்குவதுடன், அதிகார துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தவிர்த்து தங்களது சுயகௌரவத்தைப் பாதுகாத்தல்.
இது குறித்து கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்.
"இது அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் அல்ல, எங்களது நியாயமான உரிமைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சி. வாக்குறுதி அளித்த தற்போதைய அரசு உடனடியாக இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
மேலும், வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான உரிய தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில், நாடு தழுவிய ரீதியில் தொடர்ச்சியான தீவிர தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் என்றும் அவர்கள் இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளனர்.