மட்டக்களப்பு பெரியபோரதீவு மற்றும் பழுகாமம் ஆகிய பகுதிகளை இணைக்கும் பழுகாமம் ஆத்துக்கட்டு பாலம் முற்றிலும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து, அப்பகுதி மக்களின் போக்குவரத்து சிரமங்கள் குறித்து அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, புதிய பாலம் அமைக்கும் திட்டத்தின் கீழ், தற்காலிக பாலம் ஒன்றை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அப்பணிகள் நிறைவடையும் தருவாயை எட்டியுள்ளன.
இந்நிலையில், தேசிய மக்கள் சக்தி (NPP )யின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் நேற்று (31.08.2026) குறித்த பகுதிக்கு நேரடியாகக் கள விஜயம் மேற்கொண்டு, பூர்த்தியாகும் தருவாயிலுள்ள பாலம் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆராய்ந்தார்.
இந்த விஜயத்தின் போது, பாலத்தின் கட்டுமான முன்னேற்றம், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பயன்பாட்டிற்கு திறப்பது தொடர்பில் அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொறியாளர்கள் மற்றும் இந்திய இராணுவ அதிகாரிகளுடன் அவர் விரிவாகக் கலந்துரையாடி தகவல்களைக் கேட்டறிந்துகொண்டார்.
இக்கள விஜயத்தின் போது போரதீவுப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களும் உடனிருந்து பங்குபற்றியிருந்தனர்.