மட்டக்களப்பு, களுதாவளை மீன் சந்தையில் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மண் கலந்த நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 8 கிலோகிராம் மீன்களைப் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் புதன்கிழமை (30.09.2026)ஆம் திகதி கைப்பற்றி உடனடியாக அழித்தனர்.
களுவாஞ்சிகுடி மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான சுகாதார அதிகாரிகள் குழுவினர் அப்பகுதியில் முன்னெடுத்த விசேட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற முறையிலும், சுகாதாரச் சீர்கேட்டை விளைவிக்கும் வகையிலும் மீன்களை விற்பனை செய்த வியாபாரிக்கு அதிகாரிகள் கடுமையான இறுதி எச்சரிக்கை விடுத்தனர்.
மண் மற்றும் சேறு கலந்த மீன்களை உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு, வாந்தி, நுண்கிருமித் தொற்றுகள் மற்றும் இரசாயன மாசுபாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ள சுகாதார அதிகாரிகள், குறிப்பாகச் சிறுவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் இவ்வாறான சுகாதாரமற்ற உணவுகளால் எளிதில் பாதிக்கப்படக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினர்.
பொதுமக்களுக்குச் சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் மட்டுமே கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சந்தைகள் மற்றும் உணவகங்களில் இத்தகைய திடீர் சோதனைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும் எனப் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.