மட்டக்களப்பு திருப்பழுகாமம் ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலய தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது!

​மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று திருப்பழுகாமத்தில் எழுந்தருளியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ மாவேற்குடாப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்  தேர்த்திருவிழா இன்று (14.09.2026) ஆம் திகதி விநாயக சதுர்த்தி நன்ன நாளில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

​கடந்த (04.09.2026)ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலய மகோற்சவம், தொடர்ந்து பத்து நாட்கள் பல்வேறு திருவிழாக்களுடன் இடம்பெற்று வந்த நிலையில், இன்று(14.09.2026)ஆம் திகதி  பெருந்திரளான பக்தர்கள் சூழ தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

​இன்றைய திருவிழாவின் போது, சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து பஞ்சமுக விநாயகப் பெருமான் எழில்மிகு அலங்காரத்துடன் திருத்தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டு, ஆலய வீதியுலா வந்தார். 

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, "அரோகரா" கோஷங்களுடன் வடம் பிடித்து இழுத்து, தங்களின் நேர்த்திக்கடன்களையும் வழிபாடுகளையும் செலுத்தி பிள்ளையாரின் அருளாசியைப் பெற்றனர்.

​வருடாந்த மகோற்சவத்தின் நிறைவு நிகழ்வுகளாக நாளை (15.09.2026)ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை தீர்த்தோற்சவமும், அதனைத் தொடர்ந்து (16.09.2026) புதன்கிழமை பூங்காவனத் திருவிழாவும் நடைபெறவுள்ளன.

ஆலயத்தின் இவ்வாண்டிற்கான மகோற்சவம் இனிதே நிறைவுபெறவுள்ளது.
புதியது பழையவை