சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை சந்தித்தனர்!

​சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞரின் பெற்றோர் இன்று (21.09.2026) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தனர்.

​சிவராசா அனோஜனின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதியிடம் விவரித்த பெற்றோர், உடனடியாகத் தலையிட்டு தமது மகனின் உயிரைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

​பெற்றோரின் கோரிக்கையை கவனமுடன் செவிமடித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்புப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், அதற்காகச் சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தலையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, சவூதி அரசரிடம் இது தொடர்பில் பொதுமன்னிப்பு வழங்குமாறு இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூலக் கோரிக்கை விடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

​வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சும் சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாகச் சம்பவம் குறித்துத் தொடர்ச்சியாகக் அவதானித்து வருவதுடன், சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர வழிகளில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

​இச்சந்திப்பில் சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் சிவராசா அனோஜனின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை