வரலாற்றுச் சிறப்புமிக்க அம்பாறை பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் சிகர நிகழ்வான தீ மிதிப்பு உற்சவம் நேற்று (25.09.2026) மாலை பக்தர்களின் அரோகரா கோஷத்திற்கு மத்தியில் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இவ்வாண்டிற்கான வருடாந்த உற்சவமானது கடந்த (08.09.2026) ஆம் திகதி சடங்கு முறைகளுடன் ஆரம்பமானது.
கடந்த சில நாட்களாகக் கடுமையான விரத முறைகளைப் பின்பற்றி, காப்புக்கட்டி அம்மனை வழிபட்டு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நேற்று மாலை ஆலயத்தின் பூசகர்கள் தலைமையில் இடம்பெற்ற விசேட பூசைகளைத் தொடர்ந்து, பக்திப் பெருக்குடன் தீக்குண்டத்தில் இறங்கி தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
இவ்விழாவில் அம்பாறை மாவட்டம் மட்டுமன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர்.
நிகழ்வின் போது பக்தர்கள் எவ்வித இடையூறுகளுமின்றி வழிபாடுகளை மேற்கொள்வதற்காக ஆலய நிர்வாகத்தினரால் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அத்துடன் தொண்டர் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தனர்.