வாகரையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அராஜகம் - பெண்கள் அச்சுறுத்தல்,வீடுகளுக்குள் அத்துமீறி சோதனை!

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட தோணிதாண்டமடு கிராமத்திற்குள் இன்று (06.09.2026) நுழைந்த பொலன்னறுவை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர், பொதுமக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அராஜகமான முறையில் சோதனையில் ஈடுபட்டதுடன், பெண்களைத் தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​சம்பவம் குறித்து தெரியவருவதாவது.


​இன்று தோணிதாண்டமடு கிராமத்திற்குள் அத்துமீறி நுழைந்த குறித்த அதிகாரிகள், அங்குள்ள இருவரின் வீடுகளுக்குள் சோதனை என்ற பெயரில் பலவந்தமாக புகுந்து வீட்டைச் சூறையாடும் வகையில் செயற்பட்டுள்ளனர். இதன்போது வீட்டில் இருந்த பெண்களை மிகவும் கீழ்த்தரமான முறையில் தகாத வார்த்தைகளால் திட்டி, கடுமையான பயமுறுத்தல்களையும் விடுத்துள்ளனர்.

​அதிகாரிகளின் இந்த அராஜகச் செயல்பாடுகளைக் கண்ட கிராமவாசிகள், அதனைத் தமது தொலைபேசிகளில் புகைப்படம் மற்றும் காணொளி (Video) எடுக்க முற்பட்டபோது, அவர்களையும் அதிகாரிகள் கடுமையாக அச்சுறுத்தித் தடுத்துள்ளனர்.

​இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த எமது சமூகச் செயற்பாட்டாளர்கள் இருவர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் விரைந்து வந்தபோதிலும், அதற்குள்ளாகவே குறித்த அதிகாரிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் பொலன்னறுவை மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

​மேலும், இப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்திற்காகச் சேகரித்து வைக்கும் தேன் போத்தல்களைப் பறிமுதல் செய்வதும், வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அநாகரிகமாக நடந்து கொள்வதும் இவர்களது வழக்கமான செயல் என்றும், இதற்கு முன்பும் பல தடவைகள் இவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் கவலையுடன் குறிப்பிடுகின்றனர்.

​அரச அதிகாரிகள் என்ற அதிகார போர்வையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், மிகவும் கீழ்த்தரமாகவும் செயற்படும் இத்தகைய நபர்களுக்கு எதிராகத் தக்க சட்ட நடவடிக்கை எடுத்துத் தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனப் பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.

​இன்றைய இச்சம்பவம் தொடர்பில் நாளை காலை வாகரைப் பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
புதியது பழையவை