மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேசசபையின் அமரர் ஊர்தி மீது மரம் முறிந்து விழுந்து விபத்து - சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்!

​மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேசசபைக்குச் சொந்தமான அமரர் ஊர்தி மீது மிகப்பெரிய புளியமரம் ஒன்று முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் வாகனம் பாரிய சேதமடைந்துள்ளது.

எனினும், அதன் சாரதி எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

​சம்பவம் குறித்து தெரியவருவதாவது.

​போரதீவுப்பற்று, 37ஆம் கிராமம், கூழாவடி - நெல்லிக்காடு பகுதியில் கடந்த (08.09.2026) அன்று காலமான ஒருவரின் உடலை நல்லடக்கத்திற்காக வெல்லாவெளி மயானத்திற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி.மதிமேனன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, உடலை ஏற்றிச் செல்வதற்காக அமரர் ஊர்தி அனுப்பி வைக்கப்பட்டது.

​இந்நிலையில், நேற்று (09.09.2026) சடலத்தை ஏற்றுவதற்காக வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளையில், அருகில் இருந்த மிகப்பெரிய புளியமரம் திடீரென வாகனத்தின் மீது முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

​இவ்விபத்தில் வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடி, மேற்கூரை மற்றும் பக்கவாட்டுக் கண்ணாடிகள் (Side Mirrors) உள்ளிட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்தன.

மரத்தின் பாகங்கள் விழுந்த சமயத்தில் வாகனத்தில் இருந்த சாரதி அதிர்ஷ்டவசமாக எவ்வித காயங்களுமின்றி தப்பினார்.

​சம்பவம் தொடர்பில் தகவலறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த போரதீவுப்பற்று பிரதேசசபையின் உபதவிசாளர் த.கயசீலன், அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டார். மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி, அமரர் ஊர்தியைப் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர்.
புதியது பழையவை