மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று
மண்டூர் மெதடிஸ்த திருச்சபையின் “மலரும் மொட்டுக்கள்” சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் 2026 / 2027ஆம் ஆண்டிற்கான திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (Skill Development Programme) செப்டம்பர் 2 மற்றும் 4 ஆகிய திகதிகளில் மண்டூர் மலரும் மொட்டுக்கள் சிறுவர் அபிவிருத்தி நிலைய வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திட்டத்தின் இயக்குனர் அருள்பணி டானியேல் அருள்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, முகாமையாளர் திரு. இ. உதயதாஸ் அவர்களின் வழிகாட்டலில் இனிதே ஒருங்கிணைக்கப்பட்டது.
மாணவர்களிடம் காணப்படும் விசேட திறமைகளை கண்டறிந்து, அவற்றை நெறிப்படுத்தி அவர்களின் எதிர்காலத்தை உயர்த்துவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு இப் பயிற்சி முகாம் முன்னெடுக்கப்பட்டது.
இத் திட்டத்தின் மூலம் மண்டூர், தம்பலவத்தை, கனேசபுரம், வேத்துச்சேனை, மருங்கையடிப்பூவல், ஒல்லிமடு, புட்டியடித்துறை போன்ற பல்வேறு கிராமப்புறங்களைச் சேர்ந்த 255 மாணவர்கள் கல்வி, சமூகம் மற்றும் சரீரத் தேவைகளின் அடிப்படையில் நன்மையடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் வளவாளர்களாக பட்டிருப்பு கல்விவலய முன்னாள் ஆரம்பக் கல்வித்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. பா. வரதராஜன், பட்டிருப்பு கல்விவலய முன்னாள் அழகியல்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. க. சுந்தரலிங்கம் மற்றும் நாடகமும் அரங்கியலும் பயிற்றுனர் திருமதி. சிவமதி சயனொளி ஆகியோர் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான பல பயனுள்ள பயிற்சிகளை வழங்கினர்.
பயிற்சிகளின் நிறைவில் பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.