கோளாவில் அறுத்தநாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

​அம்பாறை மாவட்டம், கோளாவில் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு அறுத்தநாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரப் பெருமானின் வருடாந்த ஆவணி மகோற்சவப் பெருவிழா இன்று (05.09.2026) ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் மிக விமர்சையாக ஆரம்பமானது.

​இயற்கை எழில் கொஞ்சும் வளமிக்க கோளாவில் புண்ணிய பதியில், சிவாச்சாரியார்களின் வேத பாராயணம், ஓதுவார்களின் பன்னிரு திருமுறைகள், மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தர்களின் "அரோகரா" கோஷத்திற்கு மத்தியில் ஸ்ரீ விக்னேஸ்வரப் பெருமானின் கொடியேற்ற நிகழ்வு பக்திப் பெருக்கோடு நடைபெற்றது.

​இன்றைய தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ள இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் உற்சவமாக நடைபெறவுள்ளது. 

வரும்  (14.09.2026)ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை சமுத்திர தீர்த்தோற்சவமும், அன்று மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து  (15.09.2026)ஆம் தேதி பூங்காவன உற்சவமும், (16.09.2026)ஆம் தேதி (புதன்கிழமை) வைரவர் பூஜையுடனும் இவ்வாண்டிற்கான மகோற்சவம் இனிதே நிறைவடையும்.

​திருவிழா நாட்களில் தினமும் காலைத் திருவிழா 7.00 மணிக்கும், மாலைத் திருவிழா 5.00 மணிக்கும் ஆரம்பமாகும். 

மாலை வேளைகளில் விசேட ஸ்னபன அபிஷேகம், தம்பபூஜை, வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதி, வெளிவீதி உலா என்பன நடைபெறவுள்ளன.

​இம்மகோற்சவத்தின் சர்வ போதகாசிரியராக சிவஸ்ரீ. க. கு. சீதாராம் குருக்கள்(உகந்தை முருகன் ஆலயம்) மஹோற்சவ பிரதமகுருவாக சிவஸ்ரீ. சீ. கு. கெளரிசங்கர குருக்கள்(ஆலய பிரதம குரு) உதவிக்குருவாக சிவஸ்ரீ. கு. முருகு சர்மா ஆகியோரும், சாதகாசிரியராக சிவஸ்ரீ. சீ. கு. கோவர்தன குருக்களும் கடமையாற்றுகின்றனர். 

சிவஸ்ரீ. க. கு. சச்சிதானந்த சிவக்குருக்கள்(திருப்பழுகாமம்) அருளாசி வழங்க, தேவ பாராயணங்களை சிவஸ்ரீ. கலை அழகு சர்மா உள்ளிட்ட குருமார்கள் நிறைவேற்றுகின்றனர்.

​இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க மகோற்சவப் பெருவிழாவில் பக்த அடியார்கள் அனைவரும் ஆச்சார சீலர்களாகக் கலந்துகொண்டு எம்பெருமானின் திருவருள் கடாட்சத்தைப் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
புதியது பழையவை