அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவது தொடர்பாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று (07.09.2026) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றைய விசாரணையின்போது, மனுதாரரான த. கலையரசன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு நீண்ட நேரம் தமது வாதங்களை முன்வைத்தது. குறிப்பாக, 1993ஆம் ஆண்டு கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு சட்டரீதியான சமர்ப்பணங்கள் செய்யப்பட்டன்.
இதேவேளை, இவ்வழக்கில் இடையீட்டு மனுதாரர்களாக இணைந்துள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் ஆகியோர் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான சஞ்சீவ ஜெயவர்த்தன மற்றும் பைஸர் முஸ்தபா தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவும், கல்முனை உப பிரதேச செயலாளர் ஜே. அதிசயராஜ் சார்பிலான தரப்பும் அடுத்தகட்டமாகத் தமது சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளன.
இதற்காக வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை எதிர்வரும் 2026 அக்டோபர் 07ஆம் திகதிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
மேலும், சமூக செயற்பாட்டாளர்களான முபாரிஸ் எம். ஹனீபா மற்றும் நஸீர் ஹாஜியார் உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மனுக்கள் தொடர்பான விசாரணைகளும் எதிர்வரும் 2026 அக்டோபர் 07 மற்றும் 2026 நவம்பர் 02ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீண்டகாலமாக நிலவி வரும் கல்முனை உப பிரதேச செயலகத்தின் நிர்வாக மற்றும் தரமுயர்த்தல் விவகாரத்திற்கு, இந்த நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக இறுதித் தீர்வு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.