ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 63ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இன்று (07.09.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி வரை ஒரு மாத காலத்திற்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் எழுத்துமூல புதுப்பிக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து இந்த அறிக்கையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம்: நாட்டில் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் சமூக ஆற்றுப்படுத்தலை முன்னெடுக்கவும் இலங்கை அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கவலைக்குரிய விடயங்கள்: பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) தொடர்ச்சியான பயன்பாடு, தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்புகள் குறித்து அறிக்கையில் தீவிர கவலை வெளியிடப்பட்டுள்ளது.
தண்டனை விலக்கு கலாசாரம்.
இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் 'தண்டனை விலக்கு கலாசாரத்திற்கு' (Culture of Impunity) முற்றுப்புள்ளி வைக்க உடனடியாகவும் உறுதியாகவும் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
இன்றைய அமர்வில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதைத் தொடர்ந்து, இலங்கை நிலவரம் மற்றும் சர்வதேச நாடுகளின் நிலைப்பாடுகள் தொடர்பான முக்கிய விவாதங்கள் அடுத்தடுத்த நாட்களில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.