உடல் ரீதியிலான சவால்களைத் தமது கல்விக்கனவுகளுக்குத் தடையாகக் கொள்ளாது, இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘பல்கலைக்கழக சாதனையாளர்களின் பெருமை’ விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் மூன்றாவது கட்டம் நிகழ்ச்சி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் நேற்று (12.09.2026) நடைபெற்றது.
இத்திட்டத்தின் கீழ், தற்போது இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் கௌரவிக்கப்படுவதுடன், மாணவர் ஒருவருக்கு ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் ஒரு இலட்சம் ரூபா உதவித்தொகையாக வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் முதலாவது வேலைத்திட்டம் கொழும்பிலும், இரண்டாவது வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்திலும் நடைபெற்ற நிலையில், இதன் மூன்றாவது மற்றும் இறுதி வேலைத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கமைய கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் 50 மாற்றுத்திறனாளி மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டதுடன், முழுமையான வேலைத்திட்டத்தின் மூலம் இவ்வருடத்தில் சுமார் 400 மாணவர்கள் இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய:
"இந்த சந்தர்ப்பத்தை மிகவும் பெறுமதிமிக்க ஒரு சந்தர்ப்பமாக நான் கருதுகிறேன். நமது நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் மனவுறுதி, அர்ப்பணிப்பு மற்றும் முயற்சியுடன் அனைத்துத் தடைகளையும் தாண்டி செல்லும் உங்களைப் போன்ற மாமுன்னோக்கிச்ணவர் சமூகத்தைக் கௌரவிக்கக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
உங்கள் அனைவரையும் குறித்து பெருமிதம் அடைகிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பாடத்தை எங்களுக்குக் கற்றுத் தருகிறீர்கள். சவால்களுக்கு அஞ்சாது எவ்வாறு முன்னோக்கிச் செல்வது என்பதற்கு நீங்களே முன்மாதிரியாகத் திகழ்கிறீர்கள். உங்களைப் பல்கலைக்கழகம் வரை கொண்டு சேர்த்த பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் ‘வளமான நாடு - அழகான வாழ்க்கை’ என்பதை அனைவருக்கும் உருவாக்குவதாகும். அந்தப் பயணத்தில் எந்தவொரு சவாலுக்கு மத்தியிலும் நாம் எந்தவொரு மாணவரையும் கைவிடப் போவதில்லை. அனைவருக்கும் கௌரவமான மற்றும் சமத்துவமான கல்வி கட்டமைப்பொன்றை உருவாக்கவே நாம் முயற்சிக்கிறோம். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக அரசாங்கம் என்ற ரீதியில் நாம் பொறுப்பை ஏற்றுக்கொண்டது அதனாலேயே ஆகும்.
இலவசக் கல்வி என்பது புத்தகங்களை வழங்குவது மட்டுமன்றி, கற்பதற்குத் தேவையான சூழலைச் சரியாக அமைத்துக் கொடுப்பதாகும். தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரதானப் பிரச்சினை விடுதிப் பிரச்சினையாகும் என்பதை நாம் அறிவோம். அந்த விடுதிகளை நிர்மாணிக்கும் திட்டத்தை இவ்வருடத்தில் நாம் ஆரம்பித்துள்ளோம்.
அதற்கமைய 3 வருடங்களுக்குள் சுமார் 16,000 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்க நாம் எதிர்பார்க்கிறோம். அவ்விடுதிகள் மாற்றுத்திறனாளி மாணவர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.