யாழ் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத் தேர்த் திருவிழா.!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின்  தேர்த்திருவிழா இன்று (09.09.2026) ஆம் திகதி பக்திப் பெருக்குடனும் மிக விமரிசையாகவும் நடைபெற்றது.

​கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி (17.08.2026)ஆம் திகதி  கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கிய இவ்வாண்டின் வருடாந்த திருவிழா, 25 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

இதன் முக்கிய நிகழ்வாக நேற்றைய தினம் (08.09.2026) மாலையில் அழகிய சப்பரத் திருவிழா நிறைவுற்றது.

​அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் அதிகாலை வசந்தமண்டபத்தில் சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் இடம்பெற்றன. 

தொடர்ந்து, பெருந்திரளான பக்தர்களின் "அரோகரா" கோஷத்திற்கு மத்தியில், அலங்காரக் கந்தனாய் வெளிவீதி உலா வந்த நல்லூர் அழகன், கம்பீரமான சித்திரத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆனந்தக் காட்சி அளித்து அருள்பாலித்தார்.

​இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த இலட்சக்கணக்கான பக்தர்களுடன், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும் பெருமளவில் வருகை தந்து எம்பெருமானை மனமுருகி வழிப்பட்டனர்.

​இன்றையத் தேர்த் திருவிழாவைத் தொடர்ந்து, நாளைய தினம் (10.09.2026) புனித தீர்த்தக் கேணியில் தீர்த்தத் திருவிழாவும், மாலையில் கொடியிறக்கமும் நடைபெற்று இவ்வாண்டிற்கான மகோற்சவப் பெருவிழா இனிதே நிறைவுபெறவுள்ளது.
புதியது பழையவை