Clean Sri Lanka "அத்தம்" திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடக்கம் - போரதீவுப்பற்றில் துப்புரவுப் பணி வெற்றிகரமாக முன்னெடுப்பு!

Clean Sri Lanka தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், "அத்தம்" செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று (19.09.2026) ஆம் திகதி வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 43 கிராம சேவகர் பிரிவுகளிலும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

​இதன் முக்கிய கட்டமாக, பழுகாமம் 1-ம் பிரிவில் அமைந்துள்ள வாய்க்காலைத் துப்புரவு செய்யும் சிரமதானப் பணி போரதீவுப்பற்று பிரதேசசபையின் வாகன உதவியுடன் இன்று பழுகாமத்தில் மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுக்கப்பட்டது.

​இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன், உதவி பிரதேச செயலாளர் எஸ்.கமல்ராஜ் மற்றும் போரதீவுப்பற்று பிரதேசசபையின் உறுப்பினரும்  Clean Sri Lanka இணைப்பாளருமாகிய  செல்வி. மகாலிங்கம் மனோதினி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

​அத்துடன், பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், பிரஜா சக்தி தலைவர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து தமது பூரண பங்களிப்பை வழங்கினர்.

​"எமது கிராமத்தை நாமே சுத்தம் செய்து, தூய்மையான தேசத்தைக் கட்டியெழுப்புதல்" என்ற உயரிய நோக்கோடும் மக்களின் உன்னதமான ஒத்துழைப்போடும் இச்செயற்றிட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை