சவுதி அரேபியாவில் இலங்கை இளைஞனுக்கு மரண தண்டனை - உயிரைக் காப்பாற்ற உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கை அவசியம் – சாணக்கியன் MP வலியுறுத்து.!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இலங்கை அரசாங்கம் உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேஸ்புக் பதிவொன்றுடன் தொடர்புபட்ட வழக்கில் அனோஜனுக்கு சவுதியின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவுதி ரியால் அபராதமும் விதித்திருந்தது.

இதற்கெதிராக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக செப்டெம்பர் 17 ஆம் திகதி வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.

​வெளிவிவகார அமைச்சு மீது கேள்விகள்....

இந்த விவகாரம் தொடர்பில் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாகத் தெரிவித்துள்ள சாணக்கியன் MP, வெளிவிவகார அமைச்சினதும் இலங்கைத் தூதரகத்தினதும் செயற்பாடுகள் குறித்து பின்வரும் முக்கிய கேள்விகளை முன்வைத்துள்ளார்.

​மேல்முறையீடு வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு எனத் தூதரக சட்ட ஆலோசனையில் கூறப்பட்டிருந்தும், பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை சந்தித்த பின்னர் குடும்பத்தினருக்கு மேல்முறையீடு செய்ய ஏன் அறிவுறுத்தப்பட்டது?

​சட்டக் கட்டணமாகக் கோரப்பட்டு, வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் தொடர்புடைய கணக்கில் குடும்பத்தினரால் செலுத்தப்பட்ட ரூ. 1,890,766 எவ்வாறு பயன்படுத்தப்பட்டது?

​ஆகஸ்ட் 24 அன்று மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆவணங்கள் செப்டெம்பர் 16 அன்றே குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டது ஏன்?

​மேல்முறையீட்டு ஆவணத்தில் குறிப்பிடப்பட்ட சட்டத்தரணிக்கு பதிலாக வேறொருவர் நீதிமன்றத்தில் முன்னிலையானது ஏன்?

​முன்வைக்கப்பட்டுள்ள அவசரக் கோரிக்கைகள்.

​வெளிவிவகார அமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சருடனும் மிக உயர்ந்த மட்டத்துடனும் உடனடியாகப் பேச வேண்டும்.

​சவுதி அதிகாரிகளிடமிருந்து தீர்ப்பின் அதிகாரப்பூர்வ நகலையும் வழக்கு பதிவுகளையும் உடனடியாகப் பெற வேண்டும்.

​அனுபவமிக்க சுயாதீன சட்டத்தரணியின் உதவியுடன் மேல்முறையீட்டு வாய்ப்புகளை ஆராய்வதோடு, மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்புப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

​"இது ஒரு சாதாரண தூதரக நடவடிக்கை அல்ல, ஒரு பிரஜையின் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரம். 

பொறுப்புக்கூறல் குறித்த கேள்விகள் ஒருபுறமிருக்க, அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அவசர நடவடிக்கைகள் எக்காரணம் கொண்டும் தாமதிக்கக் கூடாது" என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதியது பழையவை