மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச சபையினால் "வளமான நாடு – அழகான வாழ்வு புத்துயிர்க்கும் புதுநகரம்" எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் உள்ளூராட்சி வாரத்தின் 4-ஆம் நாள் நிகழ்வு, நேற்று(17.09.2026)ஆம் திகதி பாலையடிவட்டை பொதுச்சந்தை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
"சுகாதாரமும் துப்புரவு தினம்" மற்றும் "சுற்றாடல் மரநடுகை தினம்" ஆகியவற்றை ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட இந்நிகழ்வு, பிரதேச சபை தவிசாளர் வி. மதிமேனன் தலைமையில் இடம்பெற்றது.
கடந்த 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரச் சூழலைத் தொடர்ந்து, பாலையடிவட்டையில் அமைந்திருந்த பிரதேச சபைக்குச் சொந்தமான பொதுச்சந்தை வளாகத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டது.
சுமார் 35 வருடங்களுக்கும் மேலாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த இந்நிலத்தை விடுவிப்பதற்கு, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச சபைத் தீர்மானத்தின் வழிகாட்டலில், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து தொடர் முயற்சிகளை மேற்கொண்டார்.
இதன் பலனாக இவ்வருடம் குறித்த இராணுவ முகாம் முழுமையாக அகற்றப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு விடுவிக்கப்பட்டதுடன் அப்பகுதி மக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்வளாகத்தை மீண்டும் பொலிவுறச் செய்யும் வகையில், பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கனரக ஜே.சி.பி (JCB) எந்திரங்களின் உதவியுடன் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.
அத்துடன், 37ஆம் கிராம பொதுமயானத்திற்குச் செல்லும் பாதையும் செப்பனிடப்பட்டது.
சுற்றாடல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், அப்பகுதியிலுள்ள ஆலயங்களுக்கும் மாணவர்களுக்கும்,பொதுமக்களுக்கும் 500 தென்னம்பிள்ளைகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச சபையின் உபதவிசாளர் த. கயசீலன், செயலாளர் சண்முகராஜா விஜிதராஜா, மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் சு. இளமாறன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி. குகநேசன், பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள், ஆலய நிர்வாகிகள், மாணவர்கள் எனப் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.