சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வயிற்றுப்போக்கு, வாந்தியால் பாதிப்பு!

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் 14 மாணவிகள், சவர்மா உட்கொண்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட உணவு ஒவ்வாமையால் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

​கடந்த வெள்ளிக்கிழமை (02.10.2026) குறித்த மாணவிகள் ஒன்றிணைந்து சவர்மா (Shawarma) ஒடர் செய்து உட்கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்களுக்குக் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

​இதனைத் தொடர்ந்து 14 மாணவிகளும் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுள் ஒரு மாணவியின் நிலை தொடர்பில் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

​இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரீ.எம். நஜீப்கான் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) குழுவினர் கள ஆய்வுகளை மேற்கொண்டு தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை