அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் திருடப்பட்டு, மருதமுனையில் அறுவைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 எருமை மாடுகளை மீட்ட சம்மாந்துறை பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
சம்மாந்துறை தென்னம்பிள்ளை கிராமத்தைச் சேர்ந்த கலந்தர் லெப்பை அப்துல் றசூல் என்பவருக்குச் சொந்தமான 12 எருமை மாடுகள் கடந்த செப்டெம்பர் 30ஆம் திகதி காணாமல் போனமை தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இம்முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட இரகசிய விசாரணைகளில், குறித்த மாடுகள் கல்முனை ஊடாக மருதமுனைப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு அறுவைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
சம்பவம் தொடர்பில் மருதமுனையைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரும், சம்மாந்துறையிலிருந்து மாடுகளை அறுவைக்காகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்மாந்துறையைச் சேர்ந்த 53 வயதுடைய மற்றொரு நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் மருதமுனையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 எருமை மாடுகளும் பொலிஸாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் இன்று (05.10.2026) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். அத்துடன், இத்திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரைக் கண்டறிய மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் உத்தரவிடப்பட்டது.
மேலும், பொலிஸ் பாதுகாப்பில் உள்ள 7 எருமை மாடுகளையும் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான பிணை நிபந்தனையின் அடிப்படையில் உரிமையாளரிடம் ஒப்படைக்க நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்ல, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராச்சி ஆகியோரின் வழிகாட்டலில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த பிரதீப் குமார மற்றும் பெரும் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.வீ.எல். சமீர தலைமையிலான பொலிஸ் குழுவினர் இத்தேடுதல் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர்.