இன்று (அக்டோபர் 17, 2026) அனுட்டிக்கப்படும் அனைத்துலக வறுமை ஒழிப்பு நாளில், இலங்கையின் முப்பது ஆண்டுகால உள்நாட்டுப் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, இன்னமும் வறுமையின் பிடியில் இருந்து முழுமையாக மீள முடியாமல் தவித்து வரும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்போதைய அவலநிலை குறித்து விசேட கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1987 அக்டோபர் 17 அன்று தீவிர வறுமை மற்றும் பசிக்கு எதிராக மனித உரிமைகள் பிரகடனம் முன்மொழியப்பட்ட நாளை நினைவு கூரும் வகையில், 1992 முதல் ஐக்கிய நாடுகள் சபையால் இந்த நாள் அதிகாரப்பூர்வ சர்வதேச வறுமை ஒழிப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அனுட்டிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், உலக நாடுகள் வறுமையை ஒழிக்கும் பாதையில் பயணிக்கும் வேளையில், போர் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்த போதிலும், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அண்மைய அறிக்கைகளின்படி, நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் வடகிழக்கு மாகாணங்களிலேயே பல்பரிமாண வறுமை மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் உச்சத்தில் இருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் காலத்தில் (2009) இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் கஞ்சி குடித்து வாழ்ந்த வரலாறும், கடுமையான பொருளாதாரத் தடைகளைச் சந்தித்த துயரமும் ஈழத்தமிழர்களுக்கு உண்டு. தற்போதைய சூழலிலும் அந்த வறுமைப் பின்னணி பல்வேறு பரிமாணங்களில் தொடர்வதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வடகிழக்கில் நீடிக்கும் வறுமைச் சுமையின் முக்கிய காரணிகள்.
வாழ்வாதார இழப்பும் பொருளாதார முடக்கமும்.
போருக்கு முன்னர் இலங்கையின் நெல் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கையும், மீன்பிடித் தேவையையும் பூர்த்தி செய்த வடகிழக்கு, உயர் பாதுகாப்பு வலயங்கள், நிலக்கண்ணிவெடிகள் மற்றும் மீன்பிடித் தடைகள் காரணமாகப் பாரம்பரிய வாழ்வாதாரங்களை இழந்துள்ளது.
மேலும், நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதால் பொருளாதார மீட்சி மிகவும் மந்தகதியில் உள்ளது.
பல்பரிமாண வறுமையும் நுண்கடன் சுழலும்:
முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்கள் மிகக் குறைந்த குடும்ப வருமானம் கொண்டவையாகத் தொடர்கின்றன.
தூய்மையான குடிநீர் பற்றாக்குறை நிலவும் இச்சூழலில், முறையான வங்கிக் கடனுதவிகள் இன்மையால் மக்கள் அதிக வட்டி வீதம் கொண்ட தனியார் நுண்கடன்களை நாடி மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
சமூகக் கட்டமைப்புச் சிதைவு.
போரினால் ஆண்கள் கொல்லப்பட்டதாலும், காணாமல் ஆக்கப்பட்டதாலும் பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
மறுபுறம், போர்க்கால இடப்பெயர்வுகள் மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு, மந்தபோசனை (ஊட்டச்சத்து குறைபாடு) மற்றும் மன உளைச்சலும் தொடர்கின்றன.
நில உரிமைகளும் இராணுவமயமாக்கலும்.
இடம்பெயர்ந்த மக்கள் சொந்த நிலங்களுக்குத் திரும்புவதில் முழுமையான தீர்வு எட்டப்படாததும், விவசாய மற்றும் குடியிருப்பு நிலங்கள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாததும் சுயதொழில் முயற்சிகளுக்குப் பெரும் தடையாகவுள்ளன.
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாடுகளுக்கான மேச்சல் தரைகளாக இனம்காணப்பட்ட மயிலத்தமடு, மாதவனை பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றங்களால் மாடுகளை மேய்ப்பதற்குத் தடை விதிக்கப்படுவதும், தொடர்ச்சியாக கால்நடைகள் வெட்டப்படுவதும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காவதும் இப்பகுதி பால் உற்பத்தியைப் பாதித்துள்ளது.
இதனால், அதனை நம்பி வாழ்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளும், முறையான நீண்டகால மறுவாழ்வுத் திட்டங்கள் இல்லாததும் வடகிழக்கு மக்களின் பொருளாதார உரிமைகளையும் வாழ்வாதார மேம்பாட்டையும் தொடர்ந்து சவாலுக்குள்ளாக்கியுள்ளன.
இந்த அனைத்துலக வறுமை ஒழிப்பு நாளில், வறுமைக் கோட்டின் கீழுள்ள மக்களின் துயர் துடைக்க ஆக்கபூர்வமான நீண்டகாலத் தீர்வுகள் காணப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.