ஈழத்தின் நடுநிலையான ஊடகவியலாளரும், பிபிசி (BBC) வானொலி உட்பட பல முன்னணி ஊடகங்களின் செய்தியாளருமான மயில்வாகனம் நிமலராஜனின் 26வது ஆண்டு நினைவுதினம் இன்றாகும் (அக்டோபர் 19, 2026).
கடந்த 2000ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் திகதி, அதியுயர் பாதுகாப்பு வலயமும் கடுமையான ஊரடங்குச் சட்டமும் அமலில் இருந்த காலகட்டத்தில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் ஊடகப் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையே நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டார்.
படுகொலைச் சம்பவம்.
அன்று இரவு 09.45 மணியளவில் தனது வீட்டில் செய்திகளை எழுதிக்கொண்டிருந்த நிமலராஜனை, வீட்டிற்குள் நுழைந்த கொலையாளிகள் அச்சுறுத்தியுள்ளனர்.
அவரது தந்தையின் பின்ன கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியவாறு, துப்பாக்கிதாரியொருவர் நிமலராஜனை நோக்கிச் சுட்டுள்ளார்.
தான் எழுதிய செய்தித் தாள்களின் மீதே சாய்ந்தபடி அவர் சம்பவ இடத்திலேயே உயிர்த்தியாகம் செய்தார்.
கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடும் போது வீசிய எறிகுண்டுத் தாக்குதலில், நிமலராஜனின் தந்தை மயில்வாகனம், தாய் லில்லி திரேஸ் மற்றும் 11 வயதான அவரது மருமகன் ஆகியோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
தியாகமும் குடும்பப் பின்னணியும்.
1961ஆம் ஆண்டு யூன் 05ஆம் திகதி பிறந்த நிமலராஜன், பரிமளா என்பவரை மணம் முடித்து மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார். போர்ச் சூழல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து நடுநிலையான செய்திகளை வெளிக்கொணர்ந்த வெகு சிலரில் இவரk முத்திரைப் பதித்திருந்தார்.
பணியாற்றிய ஊடகங்கள்: பிபிசி (BBC) தமிழ் மற்றும் சிங்கள சேவைகள், வீரகேசரி நாளேடு, ராவய நாளேடு, சூரியன் எஃப்.எம் வானொலி.
இவரது மறைவுக்குப் பின்னர், இவரது தாயார் லில்லி திரேஸ் 2021ஆம் ஆண்டும், தந்தை மயில்வாகனம் 2023ஆம் ஆண்டும் கனடாவில் காலமானமை குறிப்பிடத்தக்கது.
நீதி மறுக்கப்பட்ட 26 ஆண்டுகள்.
இக்கொலை தொடர்பாக ஈ.பி.டி.பி அமைப்பைச் சேர்ந்த நெப்போலியன் (செபஸ்டியன்), ரமேஷ், ஜெகன், முரளி, பாஷா உள்ளிட்ட 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு (இலக்கம்: பி 423/2000) விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் வெளிநாடுகளுக்குத் தப்பியோடினர்; அதன் பின்னர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கு விசாரணைகள் முடங்கின.
நீண்ட காலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆய்வில் இருந்த கோப்பு தொடர்பாக, 2021 ஏப்ரல் மாதம் சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடரப் போதுமான ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2021 மே 05ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றம் சட்டமா அதிபரின் அந்தத் தீர்மானத்தை வெளிப்படுத்தியது. இதன்மூலம் எந்தவித நீதியுமின்றி, 26 ஆண்டுகளாக நிமலராஜனின் படுகொலைக்கான நீதி கோரும் போராட்டம் தொடர்கிறது.
இலங்கையில் ஊடகவியலாளர் படுகொலைகள்.
இலங்கையில் பதிவான ஊடகவியலாளர் படுகொலை வரலாற்றில், முதன்முதலாக 1985 டிசம்பர் 25ஆம் திகதி அக்கரைப்பற்றைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை தேவராசா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொண்டவெட்டுவான் முகாமில் படுகொலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து, 1985 டிசம்பர் 25 முதல் 2009 மே 18 வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் சுமார் 44 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:
தமிழ் ஊடகவியலாளர்கள்: 37
சிங்கள ஊடகவியலாளர்கள்: 05
முஸ்லிம் ஊடகவியலாளர்கள்: 02
ஆட்சிக்கால வாரியான படுகொலைகள்:
ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்காலம்: 02
ரணசிங்க பிரேமதாச ஆட்சிக்காலம்: 02
சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக்காலம்: 13
மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலம்: 27
செய்திக்காக குரல் கொடுத்தமைக்காகவும், உண்மையை எழுதியமைக்காகவும் உயிர்த்தியாகம் செய்த ஊடகவியலாளர்களின் நினைவுகள் இலங்கையின் பத்திரிகை வரலாற்றில் அழியா வடுக்களாக நிலைத்து நிற்கின்றன.