திருகோணமலையில் அதிர்ச்சி: வீடு திடீரென தாழிறங்கியதால் தவிக்கும் குடும்பம்!

​திருகோணமலை - மிகிந்தபுரம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில், வீடு ஒன்று திடீரென தாழிறங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

​பாரதிபுரம் கிராமத்தில் அமைந்துள்ள குறித்த வீட்டின் கிணறும், அதனை அண்டியுள்ள சமையலறைப் பகுதியும் திடீரென தாழிறங்கியுள்ளன. 

இதனால் கிணற்றின் கட்டுப் பகுதியும், சமையலறையின் ஒரு பகுதியும் சுவரோடு அந்தரத்தில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.

​எந்த நேரத்திலும் முழுமையாக இடிந்து விழலாம் என்ற அபாயகரமான சூழலில், குடும்பத்தினர் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சமையலறையில் இருந்த அத்தியாவசியப் பொருட்களை மட்டும் பத்திரமாக வெளியேற்றியுள்ளனர்.

தற்போது அவர்கள் வீட்டின் முன் பகுதியில் மிகுந்த அச்சத்தோடும் பாதுகாப்பற்ற நிலையிலும் வசித்து வருகின்றனர்.

​அதிகாரிகளின் மெத்தனப்போக்கு
​கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இப்பகுதி தொடர்ச்சியாகத் தாழிறங்கி வருவதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

​இது குறித்து அப்பகுதி கிராம சேவகருக்கும், அனர்த்த முகாமைத்துவப் பிரிவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவருக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து நிலவரத்தைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். 

எனினும், இதுவரை எவ்விதமான உறுதியான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

​
​தொடரும் மழைக் காலச் சூழலிலோ அல்லது நிலத்தடி மண் அரிப்பு காரணமாகவோ இப்பகுதி மேலும் தாழிறங்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகமும், அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரும் உடனடியாகத் தலையிட்டு இக்குடும்பத்திற்குப் பாதுகாப்பான மாற்று ஏற்பாடுகளையும், அவசர நிவாரண உதவிகளையும் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
புதியது பழையவை