கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப் பட்டமளிப்பு விழா, 2026ஆம் ஆண்டிற்கான நிகழ்வாக மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள விஞ்ஞான சௌக்கிய பராமரிப்பு பீட அரங்கில் இன்று(03.10.2026)ஆம் திகதி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
பல்கலைக்கழக வேந்தர் ஓய்வுநிலை பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களின் தலைமையில், உபவேந்தர் பேராசிரியர் பிரதீபன் அவர்களின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரட்ன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் மங்கள இசையுடன் அதிதிகளும் மாணவர்களும் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு விழா முறைப்படி ஆரம்பமானது.
இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகப் பணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் சுந்தரேசன், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி பாரதி கெனடி உட்பட பீடங்களின் தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவின் போது, பல்கலைக்கழகத்தின் சுமார் 57 துறைகளில் இளமானி மற்றும் பட்டமேற்படிப்புகளை நிறைவுசெய்த 2,369 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன், மருத்துவத் துறை மற்றும் ஏனைய துறைகளில் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தித் தங்க விருதுகள் பெற்ற சிறப்புத் தகைமையாளர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.