முன்னதாக 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பைப் பெற்றிருந்த கலகொடஅத்தே ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை இன்று (05.10.2026) முதல் மீண்டும் அமுல்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றில் ஆஜராகாமல் தொடர்ந்து தவிர்த்து வந்த பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கடந்த 03ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
களுத்துறை, பிட்டிகல, இஹலஹேரஸ்ஸ, தீனியாவல பகுதியில் அமைந்துள்ள லேனகிரிய ஆரண்ய சேனாசனம் எனும் ஆசிரமத்தில் மறைந்திருந்த நிலையிலேயே இவர் பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மையில் கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளைத் தொடர்ந்து, குறித்த ஆசிரமத்தில் மறைந்திருந்த ஞானசார தேரர் பொலிஸாரினால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
இஸ்லாம் மார்க்கத்தையும் திருக்குர்ஆனையும் இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்த குற்றச்சாட்டில் சட்ட மாஅதிபரினால் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகலவினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், ஞானசார தேரருக்கு முன்னர் வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொது மன்னிப்பை இரத்து செய்து, அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு சட்ட மாஅதிபர் தாக்கல் செய்த மனுவை அடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றமும் திறந்த பிடியாணை பிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
செப்டெம்பர் 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் வழக்குகள் விசாரணைக்கு வந்த போது ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை திருப்திகரமாக இல்லை எனத் தெரிவித்த நீதிமன்றம், அவரது பிணையாளர்களும் ஆஜராகாததைச் சுட்டிக்காட்டியது.
இதனைத் தொடர்ந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்ததுடன், பொலிஸ் மா அதிபர் ஊடாகப் பிடியாணையை உடனடியாக அமல்படுத்துமாறு உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.