உலகளாவிய ரீதியில் அக்டோபர் 01ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச சிறுவர் தினம் மற்றும் சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் மாணவர்களைக் கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வுகள் நேற்று (01.10.2026) ஆம் திகதி காலை பாடசாலை வளாகத்தில் மிகக் கோலாகலமாக இடம்பெற்றன.
நாட்டின் எதிர்காலத் தூண்களான சிறுவர்களையும், சமூகத்தின் அனுபவக் கருவூலங்களான முதியோர்களையும் ஒரே நாளில் போற்றும் வகையில் அமைந்த இத்தினத்தில், பாடசாலை அதிபர் திரு. கி. கிருஷ்ணதாசன் அவர்களின் தலைமையில் சிறப்பு வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்றைய தினம் பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் அனைவரும் பிரதான நுழைவாயிலில் வைத்து ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களால் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து மாணவர்களுக்குச் சிறுவர் தினச் சின்னங்கள் சூட்டப்பட்டதுடன், இனிப்புகளும் தின்பண்டங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வு மாணவர்களிடையே பெருமகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, சிறுவர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கான மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றதுடன், போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களின் பங்களிப்புடன் இடம்பெற்ற இம்மாபெரும் சிறுவர் தின விளையாட்டுக்கான முழுமையான அனுசரணையினைப் பழுகாமம் தேசிய சேமிப்பு வங்கி (NSB) வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.