மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்களின் குடிநீர் பிரச்சினை, பாடசாலை தரமுயர்த்தல், வீதிப் புனரமைப்பு உள்ளிட்ட பல முக்கிய அடிப்படைத் தேவைகள் குறித்து ஆராயும் பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (01.10.2026) ஆம் திகதி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன் அவர்களின் ஏற்பாட்டில், பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. பிரபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. ஸ்ரீநேசன், வைத்தியர் இ. ஸ்ரீநாத், போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் வி. மதிமேனன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஆ. சுதாகரன், உதவிப் பிரதேச செயலாளர் சி. கமல்ராஜ், கணக்காளர் தி. அம்பிகாபதி உள்ளிட்ட துறைசார் நிறுவனப் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகளும், எட்டப்பட்ட தீர்மானங்களும் வருமாறு.
கண்ணபுரம் பகுதியில் தேசிய சமூக நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் சரிவர இடம்பெறுவதில்லை எனச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஸ்ரீநேசன், மக்களுக்கு குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது சீரான குடிநீரை வழங்குமாறு வலியுறுத்தினார்.
இதற்கான விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
கண்ணபுரம் கண்ணன் வித்தியாலயத்தில் தரம் 5 வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறுவதால், அங்குள்ள 75 மாணவர்களின் மேல்நிலைக் கல்வியைக் கருத்திற்கொண்டு பாடசாலையை தரம் 9 வரை தரமுயர்த்துமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள், அது தொடர்பில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர்.
மிகவும் சேதமடைந்துள்ள வைக்கலை–வெல்லாவெளி பிரதான வீதியை புனரமைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, அதற்கான முதற்கட்டப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் கிராமிய வீதிகளைப் புனரமைப்பது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் வி. மதிமேனன் கருத்துக்களை முன்வைத்தார்.
விநாயகபுரம் கந்தர்கோட்டை முருகன் ஆலய எல்லைக்குள் வனவளத் திணைக்களத்தினால் எல்லைக்கற்கள் நடப்படும் முயற்சி குறித்து மக்கள் மத்தியில் நிலவும் கவலை குறித்து ஆராய்ந்து தீர்வு காண்பதாக உறுதியளிக்கப்பட்டது.
மேலும், காக்காச்சிவட்டைப் பகுதியில் புதிய தபால் அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான கோரிக்கையும் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ. ஸ்ரீநாத், பிரதேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தினார்.
மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காணப் போவதாகக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் உறுதியளித்தனர்.