மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மண்டூர் 37 நவக்கிரி வித்தியாலயத்தில், "ஆரோக்கியமான சமூகத்திற்கு இணைந்து செயல்படுவோம்" எனும் கருப்பொருளின்கீழ் விசேட நடமாடும் சேவை முகாம் நேற்று (03.10.2026)ஆம் திகதி வெற்றிகரமாக நடைபெற்றது.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் சுதேச மருத்துவத் திணைக்களம் ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்த இச்சேவை முகாமிற்கு, கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம், போரதீவுப்பற்று பிரதேச செயலகம், போரதீவுப்பற்று பிரதேச சபை மற்றும் இலங்கை பொலிஸ் ஆகிய அரச கட்டமைப்புக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தன.
அத்துடன் மட்டக்களப்பு ரொட்டரி கழகம், ESOFT மட்டக்களப்பு மற்றும் ESOFT லியோ கழகம் ஆகிய அமைப்புகளும் தங்களது மேலதிக பங்களிப்புகளை வழங்கியிருந்தன.
காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற்ற இம்முகாமில், பொதுமக்களுக்குத் தேவையான பல்வேறு அத்தியாவசிய சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன.
பொது மருத்துவ ஆலோசனைகள், சுதேச மருத்துவ வழிகாட்டல்கள், இலவசக் கண் பரிசோதனைகள் மற்றும் இலவச மூக்குக் கண்ணாடிகள் விநியோகம்.
விசேட தேவையுடையோருக்குச் சக்கர நாற்காலிகள் மற்றும் மிதிவண்டிகள் (சைக்கிள்) வழங்கி வைக்கப்பட்டன.
போசாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்குப் போசாக்கு உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
சமூக நலன் சார்ந்த உதவிகள், கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல்கள், பொலிஸாரின் பாதுகாப்பு விழிப்புணர்வுச் சேவைகள்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார செயலாளர் எச்.எம்.டபிள்யூ. திசாநாயக்க, மாகாண சுதேசிய மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் டாக்டர் எம். ஏ. நபீல், பிரதி ஆணையாளர் டாக்டர் ஏ. அனெஸ்டின், போரதீவுப்பற்று பிரதேசசபை தவிசாளர் வி. மதிமேனன், பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன், உப தவிசாளர் த. கயசீலன், உதவி பிரதேச செயலாளர் சி. கமல்ராஜ், மாவட்ட சமூக சேவை அலுவலர் ஈ. சிவலிங்கம், ரொட்டரி கழகத் தலைவரும் கல்முனை வைத்தியசாலையின் பணிப்பாளருமான டாக்டர் சுகுணன், சமூக மருத்துவ அதிகாரியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வனிதா அனெஸ்டின்,பிரதேசசபை உறுப்பினர்கள், வெல்லாவெளி பொலிஸ் பரிசோதகர் கபில் இந்திரசிறி, பாடசாலை அதிபர் எஸ். பாஸ்கரன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
ஒரே இடத்தில் பல்வேறு அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததால், போரதீவுப்பற்று மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பெரிதும் பயன்படைந்தனர்.