குண்டுமழைக்கு மத்தியிலும் கல்விக்கண் திறந்த ஈழத்து ஆசான்களின் தியாகத்தை போற்றுவோம்!

​ஆண்டுதோறும் அக்டோபர் 06-ஆம் திகதி உலகெங்கிலும் அனைத்துலக ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், எவ்வித ஆபத்துகளுக்கும் அஞ்சாது கடமையாற்றிய ஈழத்து ஆசிரியர்களின் உன்னதமான சேவையை நினைவுகூர்ந்து போற்றுவது இந்நாளின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.

​போர் மேகங்கள் சூழ்ந்து, வானூர்திகளின் இடிமுழக்கச் சத்தமும் எறிகணைகளின் வெடிச்சத்தமும் எம்மவர்களின் உயிரைக் காவுகொண்ட பேரவலத்தின் மத்தியிலும் ஈழமண்ணின் ஆசிரியர்கள் ஆற்றிய பணி வரலாற்றுச் சிறப்புமிக்கது. கொடிய இன அழிப்பு இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை, தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது, மண் குழிகளுக்குள்ளும் பதுங்குகுழிகளுக்குள்ளும் மாணவர்களைப் பாதுகாப்பாகத் தங்கவைத்து அவர்கள் கல்வி கற்பித்தனர்.

​குருதி தோய்ந்த மண்ணில் நின்று, உயிருக்கு அஞ்சாது உறுதி கொண்ட நெஞ்சத்தோடு கல்விச் சுடரை ஏந்திய ஈழத்து ஆசான்களின் தியாகமும் அசாத்திய துணிச்சலும் உலக வரலாற்றிலேயே இணையற்றவை.

​கல்வியை வெறும் தொழிலாகக் கருதாமல், பேரழிவின் மத்தியிலும் மாணவர்களின் எதிர்காலத்தைக் காக்கும் புனிதப் பணியாகச் செய்து முடித்த அத்தனை உறுதிகொண்ட ஆசிரியர்களுக்கும் இந்நாளில் எம் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் இணையற்ற சேவையினைப் போற்றிப் பெருமை கொள்வோம்!
புதியது பழையவை