அம்பாறை இறக்காமத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறை மாவட்டம், இறக்காமம் 07 – நைனாகாடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நிந்தவூர், கோவில் வீதி, 19ஆம் பிரிவைச் சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க மீராதஸ்லிம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (24.10.2026)ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளதாக இறக்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹோட்டல் ஒன்றில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றிவந்த இவர், மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு பயணித்துக்கொண்டிருந்தபோது எதிரே வந்த காட்டு யானையைக் கண்டு தப்பியோடியுள்ளார். 

இதன்போது இடறி விழுந்த அவரை யானை மிதித்ததில் உயிரிழந்துள்ளதாகப் பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும், அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். நளீம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கே.ஆர்.எம். றிசாட் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையைப் பார்வையிட்டதுடன், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் இறக்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று வயல் பகுதியில் இரண்டு நாட்களாக நோய்வாய்ப்பட்டு கிடந்த காட்டு யானை தீவிர மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும் நேற்று (24.10.2026) சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டத்தால் பொதுமக்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று இரவு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காட்டு யானைகள் வீதிகளில் நடமாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அதிகாலை வேளையில் கல்முனை லங்கா சதோச களஞ்சியத்தின் முன்பக்கக் கதவு சேதமாக்கப்பட்டதுடன், களஞ்சியத்திலிருந்த பொருட்களும் நாசமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், அருகாமையில் அமைந்திருந்த சுவரும் காட்டு யானைகளால் உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை