அம்பாறை மாவட்டம், மத்திய முகாம் 03 பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (02.10.2026) ஆம் திகதி அதிகாலை சுமார் 5.00 மணியளவில் நற்பிட்டிமுனை - கிட்டங்கி பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு பகுதியில் இருந்து மத்திய முகாம் பிரதேசத்தை நோக்கி குறித்த மாணவன் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே எதிர்பாராதவிதமாக காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
தாக்குதலில் காயமடைந்த மாணவன் உடனடியாக மீட்கப்பட்டு, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.