மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள மகாத்மா காந்தியடிகளாரின் நினைவு தூபியில், அவரது 157 வது ஜனன தின நினைவேந்தல் நிகழ்வு இன்று (02.10.2026)ஆம் திகதி மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
நிகழ்வின் போது காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, பக்திப்பூர்வமாக மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும், இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன், வர்த்தக சங்கச் செயலாளர், சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் மற்றும் பல சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, இலங்கை காந்தி சேவா சங்கத்தினால் வெளியிடப்படும் "காந்தீயம்" சிறப்பு மலரை, அதன் பிரதம ஆசிரியர் எம்.ஷாந்தன் சத்தியகீர்த்தி வெளியிட்டு வைத்தார்.
இதன் முதல் பிரதி பிரதம அதிதி உள்ளிட்ட ஏனைய விருந்தினர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.