அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சேகப்பற்று பகுதியில் நோய்வாய்ப்பட்டு விழுந்த ஆண் காட்டு யானையைக் காப்பாற்றுவதற்கான தீவிர மருத்துவச் சிகிச்சைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த (21.10.2026)ஆம் திகதி புதன்கிழமை நோய்வாய்ப்பட்டு வீழ்ந்த இந்த யானையைக் காப்பாற்றும் பணியில் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள், கால்நடை மருத்துவக் குழுவினர், இராணுவத்தினர் மற்றும் சம்மாந்துறை பொலிஸார் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
சுமார் 15 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டதாக மதிப்பிடப்படும் இந்த ஆண் யானையின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வயிற்றுப் பகுதியில் அசாதாரண வீக்கம்!
யானையின் உடலமைப்பு பொதுவாக நல்ல நிலையில் காணப்படுகின்ற போதிலும், அதன் வயிற்றுப் பகுதியில் வழக்கத்திற்கு மாறான வீக்கம் காணப்படுவதாகவும், வெளிப்புறத்தில் வெளிப்படையான காயங்கள் எதுவும் தென்படவில்லை எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யானை நோய்வாய்ப்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இருப்பினும், நஞ்சு உட்கொண்டிருக்கலாம் அல்லது பொலித்தீன் போன்ற செரிமானமாகாத பொருட்களை உட்கொண்டதால் குடல் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கால்நடை மருத்துவ அதிகாரிகள் ஆரம்பகட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாண வனவிலங்கு கால்நடை மருத்துவப் பிரிவு, அம்பாறை வனவிலங்கு அலுவலகம் மற்றும் சம்மாந்துறை வனவிலங்கு பிரிவு அலுவலகம் ஆகியன இணைந்து சிகிச்சை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகின்றன.
இதற்கமைய, கடந்த 22ஆம் திகதி யானைக்கு அத்தியாவசியமான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
மழை வெள்ளத்துக்கு மத்தியில் மீட்புப் பணிகள்!
இதற்கிடையில், அப்பகுதியில் பெய்துவரும் கனமழையால் யானை வீழ்ந்துகிடக்கும் இடத்தில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால், மருத்துவச் சிகிச்சைகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனைக் கருத்திற்கொண்டு, சிகிச்சைப் பணிகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்காக மணலைப் பயன்படுத்தி நிலத்தைச் சீரமைக்கும் நடவடிக்கைகள் இராணுவத்தினர் மற்றும் வனஜீவராசிகள் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யானையைப் பாதுகாப்பாக மீட்பதற்கும் மருத்துவக் குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் இராணுவத்தினரின் சில உறுப்பினர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சம்மாந்துறை பொலிஸாரும் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.
இரவு பகலாகக் கண்காணிக்கும் அதிகாரிகள்!
யானையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், உரிய நேரங்களில் மருந்துகளை வழங்குதல் மற்றும் அதன் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில் வனவிலங்கு அதிகாரிகள் இரவு பகலாகச் சம்பவ இடத்தில் தங்கியிருந்து ஈடுபட்டு வருகின்றனர்.
யானையின் உடல்நிலை மற்றும் மருத்துவச் சிகிச்சைகளுக்குக் கிடைக்கும் பதில் தொடர்பில் தொடர்ந்து கண்காணிப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உயிருக்குப் போராடும் இந்தக் காட்டு யானையைப் பாதுகாப்பாக மீட்டு அதன் உயிரைக் காப்பாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளும் சம்பந்தப்பட்ட தரப்பினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
(தில்சாத் பர்வீஸ்)