போரதீவுப்பற்று பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் மக்கள் நலன் சார்ந்த பிரேரணைகள் முன்வைப்பு! மகேஸ்பரம் கோபிநாத்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச சபையின் 17ஆவது மாதாந்த சபை அமர்வு கடந்த (22.10.2026)ஆம் திகதி நடைபெற்றது.

இதன்போது, கோவில்போரதீவு கிராம மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு பல்வேறு முக்கியமான பிரேரணைகளைத் தாம் முன்வைத்ததாக போரதீவுப்பற்று பிரதேச சபையின் கோவில்போரதீவு வட்டார உறுப்பினர் மகேஸ்பரம் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

நூலகக் கட்டிடத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை!

கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களின் 2024ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுமார் 1.5 மில்லியன் ரூபாய் செலவில், கோவில்போரதீவு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தை நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய வாசிகசாலையாக (நூலகமாக) மாற்றி, விரைவில் திறந்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் எனத் தாம் பிரேரணை முன்வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த கட்டிடத்திற்குச் செல்லும் பாதையைச் சீரமைக்கும் பணிகளையும் விரைவுபடுத்தி, பொதுமக்கள் இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மழைநீர் தேங்குவதைத் தடுக்க வடிகால் அமைப்புகளைச் சீரமைக்கக் கோரிக்கை!
எதிர்வரும் வாரங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடிய நிலைமையைக் கருத்திற்கொண்டு, கிராமத்தில் மழைநீர் தேங்குவதையும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் தவிர்க்கும் வகையில் தற்காலிக வடிகால்களை அமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஏற்கனவே புனரமைக்கப்பட்ட வடிகால்களைத் துப்புரவு செய்து, மழைநீர் தடையின்றி வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, கோவில் வீதி, பாரதி வீதி, சம்பந்தர் வீதி, பாடசாலை வீதி உள்ளிட்ட வீதிகளின் பல்வேறு சிறு ஒழுங்கைகள் மற்றும் ஏனைய வீதிகளில் காணப்படும் வடிகால் தொடர்பான பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மக்கள் நலனுக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுப்பேன்!

கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காகத் தன்னால் முடிந்தவரை தொடர்ந்தும் குரல் கொடுப்பேன் என மகேஸ்பரம் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலன் சார்ந்த விடயங்களை உரிய இடங்களில் சுட்டிக்காட்டி, அவற்றுக்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே தனது நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை